மத்திய மற்றும் மாநில அரசால் பள்ளி கல்லூரிகளில் ராணுவ பயிற்சியை எளிய முறையில் அளித்து நாட்டுப்பற்றை மாணவர்களுக்கு இளம் வயதிலேயே உருவாக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரிவுதான் என்சிசி. என்சிசி என்பது தேசிய மாணவர் படை என்பதன் சுருக்கமே ஆகும். தேசிய அளவில் மாணவ மாணவியர்களை ஒன்றிணைத்து வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இதன் நோக்கமாகும். என்சிசி ஆனது இந்தியா முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சரவையில கீழ் செயல்படுத்தப்பட்டு இதன் தலைமையகம் நியூ டெல்லியில் அமைந்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஒழுக்கமும் பொறுப்பும் பெற்று தேசப்பற்று மிக்க ஒரு இந்திய குடிமகனாக உருவாகின்றனர்.
அதுமட்டுமின்றி என்சிசி யில் சேரும் மாணவர்களுக்கு பலவித பயன்கள் கிடைக்கின்றன. முதலில் தனிப்பட்ட ஒழுக்கமும் சமுதாயத்தில் பற்றும் ஏற்படுகின்றன. நாட்டின் மீதும் நாட்டின் தலைவர்கள் மீதும் நம் நாட்டில் வளங்கள் மீதும் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் இளைஞர்களுக்கு ஏற்படும். இளைஞர்களுக்கு நாட்டின் மீது பற்று ஏற்படும் பொழுது இந்தியா உலக அளவில் ஒரு எழுச்சி மிக்க நாடாக உருவாகும். ஏனென்றால் இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்களின் கையில் தான் உள்ளது. எனவே அந்த இளைஞர்களை பட்டை தீட்டும் ஒரு திட்டமே தேசிய மாணவர் படை.
என்சிசி மாணவர்களுக்கு என்று நடத்தப்படும் வருடாந்திர முகாம்களில் பல வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இது மாணவர்களின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அவர்கள் வேலை வாய்ப்பு தகுதியை உயர்த்துவதற்கும் உதவுகிறது. எடுத்துக்காட்டாக முகாம்களில் துப்பாக்கி சூடுதல் பயிற்சி, வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி,மற்றும் சில கைத்தொழில் பயிற்சி என பலவகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதிலும் தேசிய மாணவர் படையால் நடத்தப்படும் முகாம்கள் பலவகையாக உள்ளன. அதில் ஆனுவல் ட்ரைனிங் கேம்ப், அட்வென்ச்சர் கேம்ப், ஆர்மி அட்டாச்மென்ட் கேம்ப் என பல வகையான முகாம்கள் மாணவர்களின் திறனை உயர்த்துவதற்கு வருடம் முழுவதும் இந்தியா முழுவதிலும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஆர்மி அட்டாச்மெண்ட் கேம்ப் கல்லூரி மாணவ மாணவியர்களை ராணுவ பயிற்சி நடைபெறும் இடத்தில் வரவழைத்து பத்து முதல் 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அவர்கள் ராணுவ பயிற்சிகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஒரு சில பயிற்சிகளை எடுத்துக் கொள்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இது ராணுவத்தில் சேர்வதற்கான குறிக்கோளை உடைய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.
தேசிய மாணவர் படை பள்ளிகளிலும் செயல்படுவதால் சிறுவர்களாக இருக்கும் பொழுது அவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தி உரிய வழியில் அழைத்துச் செல்ல முடிகிறது. எனவே இவர்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு வரும் பொழுது
சமுதாயத்தில் மதிக்கக் கூடிய வகையில் தங்கள் இளமைப் பருவத்தை அடைகின்றனர். மேலும் அவர்களை சிறுவயதிலேயே ஒழுங்குபடுத்துவதால் நேர்வழியில் சென்று உயரிய கனவை எளிதில் நிறைவேற்ற முடியும்.
ஒழுக்கம் உள்ள மாணவர்கள் கல்வியிலும் பிற செயல்களிலும் குறிப்பிட்ட மதிப்பை அடைந்து வாழ்க்கையில் உயர்கின்றனர். அதாவது பள்ளியில் பெறும் என்சிசி சான்றிதழ் கல்லூரி செல்லும் பொழுது உதவுகிறது. கல்லூரியில் பெறப்படும் B மற்றும் C சான்றிதழ்கள் அரசு வேலை வாய்ப்புக்கும் தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கும் உதவுகின்றன.
என்சிசி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்கள் அல்லது இளைஞர்களுக்கு தேசிய பாதுகாப்பு படைகளான முப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எவ்வகையான முன்னுரிமைகள் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
UPSC மற்றும் Staff Selection Commission ன் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வு பங்கு பெறும் வாய்ப்பு உண்டு. அனைத்து இந்திய பல்கலை கழகங்களில் பொறியியல் மற்றும் உயர் கல்வி களில் தனி இட ஒதுக்கீடு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.
கல்லூரியில் படிக்கும் பொழுதே என்சிசி யில் உள்ள மாணவர்களுக்கு டெல்லியில் ஜனவரி 26 இல் குடியரசு தினத்தன்று அணி வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப் படுகிறது.
தரைப்படை, கப்பற்படை, விமானப்படை மற்றும் அனைத்து சீருடை பணியாளர் தேர்வாணையத்திலும் என்சிசி சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு தனி மதிப்பெண்கள் உண்டு.
இந்திய ராணுவத்தில் Special Entry மூலம் 55 பதவிகள் என்சிசி "சி" சான்றிதழ்கள் வைத்திருப்பவருக்கு என்று தனி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.
சகாரா இந்தியா, ரிலையன்ஸ் குழுமம் போன்ற முதன்மை தனியார் நிறுவனங்களில் நிறைய பணிகளுக்கு என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
எவ்வாறு விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளதோ அது போன்று என்சிசி சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு முதன்மையான துறைகளில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
பாரா ராணுவப் படை பிரிவிலும் 2 முதல் 15 மதிப்பெண்கள் வரை என்சிசி C சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
அதாவது BSF, CISF, CRPF, SSB etc என அனைத்து பிரிவிலும் இந்த மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது.
என்சிசி C சர்டிபிகேட் வைத்திருப்பவர்களுக்கு UPSC நடத்தும் CDS தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வில் பங்குபெறும் வாய்ப்பை அடைகின்றனர்.
என்சிசி C சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு இந்திய கப்பற்படை பிரிவில் Sailor பதவிக்கு 6 மதிப்பெண்களும், Sailor GD பதவிக்கு எழுத்து தேர்வும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 9 காலி பணியிடங்கள் தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இந்திய விமானப்படை அளிக்கக்கூடிய அனைத்து பயிற்சிகளிலும் 10% என்சிசி சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பல வகையான இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் என அனைத்து துறைகளிலும் என்சிசி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் என்சிசி மாணவர்களுக்கு மாநில பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது மேலும் என்சிசி யில் உள்ள பணிகளும் என்சிசி மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. Associate NCC Officer, GCI Girls Cadet Instructor, CGI Civilian Gliding Instructor போன்ற அதிகாரப் பணிகளுக்கு என்சிசி மாணவர்கள் மட்டுமே பணியாற்ற வாய்ப்பு உள்ளது.
இதை தகுந்த முறையில் பயன்படுத்தி நாமும் உயர்ந்து நாட்டையும் உயர்த்துவோம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும் மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment