எத்தனை வகை இரசாயனம் கலந்த குளியல் சோப்புகள் வந்தாலும் வீட்டில் தயார் செய்யும் குளியல் பொடி அதாவது நலங்கு மாவின் பலன் எந்த சோப்பும் தராது. இரசாயன சோப்பு பயன்படுத்தும் பொழுது மென்மையான குழந்தைகளின் தோல் அதிக அளவில் பாதிக்கப்படும். தற்காலத்தில் நிறைய சோப்புகள் வந்தாலும் அது நிறைய பக்க விளைவை உருவாக்கும். ஆனால் நம் வீட்டில் தயார் செய்யும் குளியல் பொடியானது குழந்தைகளின் தோலுக்கு நல்ல ஊட்டச்சத்துக் கொடுத்து தோலினை மென்மையாக்குகிறது. இது எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.
பிறந்த குழந்தையாய் இருக்கும் பொழுதே இதை உபயோகப்படுத்தி வரும் பொழுது அவர்களின் தோல் இரசாயனத்திற்கு உட்படாமல் இருப்பதால் எந்தவித தோல் பிரச்சனையும் இல்லாமல் அழகான பளபளப்பான சருமத்தை பெறுகின்றனர்.
அதிகரித்து வரும் மாசு மற்றும் புகை தற்போது காணப்படும் மாறுபட்ட தட்பவெப்ப நிலை சூழல் மற்றும் அதிகமான வெப்பம் போன்ற காரணங்களால் தோலானது மிகவும் பாதிக்கப்படுகிறது. குளியல் பொடியை மட்டும் நாம் தொடர்ந்து உபயோகப்படுத்தி வருவதால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
ஆண் குழந்தைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் சேர்க்காமல் அரைத்து குளிக்கும் பொழுது உபயோகப்படுத்தலாம். பெண் குழந்தைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து இப்படியே அரைத்துக் கொள்ளவும்.
இதை குழந்தைகளை குளிப்பாட்டும் பொழுது தேய்த்துக் குளிக்க வைக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் தோல் பளபளப்பாகவும் உடல் நறுமணத்துடனும் பொலிவு பெறும்.
குழந்தைகளுக்கான பிரத்தியேகமான நலங்கு மாவு வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:.
பயத்தம் பருப்பு - 1/4 கிலோ
கடலைப் பருப்பு - 150 கிராம்
ரோஜா இதழ்கள் - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 10 கிராம்
வேட்டி வெரு - 10 கிராம்
ஆவாரம் பூ - 50 கிராம்
பூலான் கிழங்கு - 50 கிராம்
கோரைகிழங்கு - 10 கிராம்
பச்சை அரிசி - 200 கிராம்
வெந்தயம் - 20 கிராம்
செம்பருத்தி பூ - 20 கிராம்
ஆரஞ்சு தோல் - 10 கிராம்
வேப்ப இலை - 10 கிராம்
தயாரிக்கும் முறை:
மேலே கூறிய பொருட்களை நன்கு கழுவ வேண்டும். பின்பு அதன் ஈரம் போகும் வரை நன்கு உலர வைக்க வேண்டும். ஈரத்துடன் அரைக்கவே கூடாது. இல்லையெனில் பொடி முழுவதும் வீணாகிவிடும். அல்லது மேற்கூறிய அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் வைத்து நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். பின்பு அதை எடுத்து சூடு ஆறுமாறு ஆற வைக்க வேண்டும். பின்பு இங்கு அவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கடையில் கொடுத்தும் அரைத்துக் கொள்ளலாம். அரைத்தப் பொடியை காற்று புகாதவாறு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு குளிப்பாட்டும் பொழுது இதை தேய்த்து குளிப்பாட்ட வேண்டும்.
எவ்வாறு உபயோகிப்பது:
முதலில் இந்த பொடி குழந்தையின் தோலுக்கு ஒத்துப் போகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். அதற்கு அந்த பொடியை தண்ணீரில் குலைத்து குழந்தையின் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் எடுத்துக்காட்டாக கைகளில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். அன்று நாள் முழுவதும் குழந்தைக்கு அந்த இடத்தில் எந்தவித எரிச்சலும் வீக்கங்களும் இல்லை எனில் அந்த பொடியை தொடர்ந்து உபயோகிக்கலாம்.
தினமும் குழந்தைகளை குளிப்பாட்டும் பொழுது சோப்பிற்கு பதிலாக இந்த குளியல் பொடியை தண்ணீரில் குழைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உடம்பில் நன்கு தேய்த்து தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்க வேண்டும். குளிப்பாட்டும் பொழுது குழந்தைகளின் கண்ணில் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
கவனிக்க வேண்டியவை :
சில குழந்தைகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம். அல்லது சோப்புகள் உபயோகப்படுத்துவதால் ஒவ்வாமை மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் தோளில் தன்மை கேற்ப இந்த குளியல் பொடியை மாற்றியமைத்து உபயோகப்படுத்தலாம். அதாவது சில பொருட்களை சேர்த்து அல்லது சில பொருட்களை நீக்கியோ குழந்தைகளின் தோலின் தன்மை கேற்ப குளியல் பொடி தயார் செய்யலாம்.
ஏன் நலங்கு மாவு பயன்படுத்த வேண்டும்...?
வீட்டில் தயாரிக்கப்படும் நலங்கு மாவு தூய்மையான சுத்தமானது என்பதையும் தாண்டி பல்வேறு வகையான நலன்களை வழங்குகிறது. அவைகள் என்னென்ன என்பதை கீழே பதிவு செய்கிறோம்.
இதில் பெண் குழந்தைகளுக்கு தனியாக அரைக்கப்படும் நலுங்கு மாவில் கஸ்தூரி மஞ்சள் சேர்ப்பதால்
தேவையில்லாத முடி வளர்ச்சியை தடுத்து நல்ல பளபளப்பான மேனியை கொடுக்கும்.
நலங்கு மாவு குழந்தைகளின் தோலில் உள்ள அழுக்குகளை நீக்கி தோலினை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பளபளப்பாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும்.
பொதுவாக மனிதர்களின் தோலில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான புது செல்கள் உருவாகும். அதே சமயம் லட்சக்கணக்கான செல்கள் இறந்தும் போகும். இறந்த செல்களை வெளியேற்றுவது மிக முக்கியமான ஒன்றாகும். இல்லை எனில் நமது தோல் கறுத்து விடும். அல்லது அங்கங்கே கரும்புள்ளிகள் தோன்றலாம். இவை அனைத்தும் இறந்த செல்களினால் உருவாவதே ஆகும். நலங்கு மாவு தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்கள் உருவாக வழி வகுக்கும்.
வீட்டில் தயார் செய்யும் நலங்கு மாவு குழந்தைகளின் தோலுக்கு நல்ல ஈரப்பதத்தை வழங்க வல்லது. கடையில் விற்கப்படும் சோப்புகள் மற்றும் ரசாயனம் கலைந்து குளியல் பொருட்கள் குழந்தையின் தோலை சீக்கிரமாக வறட்சி அடைய செய்யும்.
குழந்தைகள் தோல் மிகவும் மென்மையானது. முடிந்த வரை அதை மிக கவனமாக கையாள வேண்டும். நம்மால் ஏற்படும் சிறு கவனக்குறைவு கூட குழந்தைகளின் தோலில் பல பிரச்சனைகளை உருவாக்கும். நாம் தேர்ந்தெடுக்கும் குளியல் பொருட்கள், உடைகள் மற்றும் தட்பவெப்ப நிலை போன்ற காரணங்களால் குழந்தையின் சருமம் அதிக அளவு பாதிப்படைய கூடும். பெரும்பாலும் குழந்தைகளின் தோல் பிரச்சனைகளில் தோல் வளர்ச்சி அடைதல் முக்கிய பிரச்சனையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குளியல் பொடி குழந்தைகளுக்கு எந்த வித பக்க விளைவும் ஏற்படாமல் இரசாயன பொருட்களில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது. வீட்டிலிருக்கும் பொருட்கள் கொண்டு இந்த குளியல் பொடி தயாரிக்கப்படுவதால் மிகக் குறைந்த அளவு செலவுதான் ஏற்படும். கடைகளில் விற்கப்படும் சோப்புகள் காட்டிலும் இந்த குளியல் பொடி அரைப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. மற்றும் இது ரசாயன பொருட்கள் சேர்க்கப்படாததால் நல்ல இயற்கையான நறுமணத்துடன் நீண்ட நாளைக்கு உபயோகப்படுத்தலாம்.
இதைத் தொடர்ந்து உபயோகப்படுத்தி வரும்பொழுது குழந்தையின் தோலை கவனித்து வரவும். ஏதேனும் மாறுபாடுகள் அதாவது அரிப்பு, சொறி, வறட்சி மற்றும் தேமல் என்பவை தென்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும். குழந்தைகளின் சரும பாதுகாப்பு பற்றி இன்னும் தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் தோல் மருத்துவரை அணுகலாம்.
இது போன்ற குழந்தைகளுக்கான டிப்ஸ் தேவைப்பட்டால் எங்கள் பக்கத்தை தொடரவும்.
சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment