நீண்ட கூந்தல் வேண்டுமா...?
அனைத்தும் வியாபார மயமாகி வரும் இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முடியை வளர்ச்சி அடைய செய்யும் ஹேர் பேக் இங்கு கூறப்பட்டுள்ளது. இந்த ஹேர் பேக் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை எளிமையான முறையில் பயன்படுத்தி முடிக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். பொதுவாக ஹேர் பேக் தலையில் உபயோகப்படுத்தும் பொழுது அது தலைக்கு நல்ல ஈரப்பதத்தையும் வேர்க்கால்களுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை தலையில் இது தொடர்ந்து இருப்பதால் இதில் இருக்கும் சாறானது பொடுகை நீக்கி மிருதுவான மென்மையான முடியை கொடுக்கிறது.
இது நெடுங்காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்றாலும் தற்போது நேரமின்மை காரணமாக யாரும் இதை செய்வதில்லை. இன்னும் ஒரு காரணம் பொருட்களின் தட்டுப்பாடு. ஆனாலும் முடி வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த ஹேர் பேக்கை வாரம் ஒரு முறை செய்து வரும் பொழுது ஆறு மாதத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். இதற்கு தேவையானப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:.
தேவையான பொருட்கள்:
ஊற வைக்கப்பட்ட வெந்தயம் - 2 தேக்கரண்டி
செம்பருத்தி இலை - 8 இலைகள்
செம்பருத்தி பூ - 8 பூக்கள்
வேப்பிலை - 10 இலைகள்
மருதாணி - கைப்பிடியில் பாதி
கறிவேப்பிலை - கைப்பிடியில் பாதி
சோற்றுக்கற்றாழை - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4 தோல் உரித்தது
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 4 துளிகள்
முருங்கைக்கீரை - சிறிதளவு
நெல்லிக்காய் - 1 சிறியது (கொட்டை இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்)
செய்முறை:
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் நன்கு கழுவி விட்டு ஊற வைக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு செம்பருத்தி பூ மற்றும் இலைகளை நாட்டுச் செம்பருத்தி செடியிலிருந்து பறிக்க வேண்டும். நாட்டுச் செம்பருத்தி பூவானது நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். நாட்டு செம்பருத்தி இலை மற்றும் பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு ரகச் செம்பருத்தியை உபயோகப்படுத்த கூடாது. அதேபோல் சோற்றுக்கற்றாழை எடுத்து தோலை நீக்கிவிட்டு அதில் உள்ள ஜெல்லி நீங்குமாறு நன்கு கழுவ வேண்டும். சோற்றுக்கற்றாழை சுத்திகரிப்பது என்பது ஏழு முறை சோற்றுக்கற்றாழையை தண்ணீரில் கழுவ வேண்டும். அப்பொழுது தான் அதில் இருக்கும் நச்சு தன்மையுள்ள ஜெல்லி வெளியேறும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இலைகளில் நுண்ணுயிர் கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு. எனவே அனைத்து பொருட்களையும் நன்கு கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சுத்தம் செய்த பின்பு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்த்து அரைக்க கூடாது. நாம் சேர்த்திருக்கும் பொருளில் உள்ள ஈரப்பதமே போதுமானது. அரைக்கும் போது தேங்காய் எண்ணெயை முதலில் சேர்க்கக்கூடாது. அரைத்து முடித்த பின்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரே ஒரு சுற்று மட்டும் அரைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தலைக்கு உபயோகப்படுத்தும் போது அது தலைமுடியுடன் நன்கு பதியும்.
மேலே குறிப்பிட்ட பொருட்கள் அளவு ஒருவருக்கு ஒரு முறை பயன்படுத்த சரியாக இருக்கும். இதனை முன்கூட்டியே அரைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்துவது சிறந்த பலனை தராது. உபயோகிக்கும் பொழுது மட்டுமே அரைத்து தலையில் தேய்க்க வேண்டும். நன்கு மைய அரைத்து தலைமுடியின் வேரிலிருந்து நுனிவரை இடவேண்டும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி வரை நேரம் வரை தலையில் இருக்க வேண்டும். சளி பிடித்துக் கொள்ளும் உடல் உடையவர்கள் சிறிது நேரம் வைத்திருந்தால் மட்டும் போதும். மேலும் குறிப்பிட்ட பொருட்களில் ஏதேனும் பொருட்கள் இல்லாவிட்டாலும் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் பேக் ரெடி செய்யலாம்.
பயன்கள்:
முடிக்கு ஊட்டச்சத்து அளித்து நீண்ட வளர்ச்சிக்கு உதவுகிறது. பொதுவாகவே ஹேர் பேக் வேர்க் கால்களுக்கு நல்ல ஈரப்பதத்தை அளிப்பதால் உடல் முழுவதும் குளிர்ச்சி அடைகிறது. மேலும் இது தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது பொடுகு, நரை, நுனிப் பிளவு, முடி கொட்டுதல், மெல்லிய முடி, அடர்த்தியின்மை, செம்பட்டை கூந்தல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஹேர்பேக் ஒரு சிறந்த தீர்வாகும்.
செம்பருத்தி பூவும் இலையும் கூந்தலை மிருதுவாக மாற்றியமைத்து பளபளப்பை கொடுக்கிறது. செம்பருத்தி இலை மற்றும் பூ ஒரு கண்டிஷனர் போல் செயல்பட்டு கூந்தலை மென்மையானதாக மாற்றிவிடும். இதில் சேர்க்கப்படும் வெந்தயம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த ஹேர் பேக் போடப்படும் அன்று கண் எரிச்சல் மற்றும் கால் எரிச்சலை அகற்றி உடல் முழுவதையும் குளுமையாக வைத்திருக்கும்.
வேப்பிலை மற்றும் சோற்றுக்கற்றாழை இரண்டும் குளிர்ச்சியையும் கொடுத்து அதே நேரம் கூந்தலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் ஒவ்வாமை போன்றவற்றை வரவிடாமல் தடுத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் சேர்க்கப்படும் மருதாணி இள
நரைக்கு ஒரு சிறந்த தீர்வாகும். மருதாணியின் சாறு முழுவதுமாக தலையில் படும்போது மெதுமெதுவாக இள நரைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எலுமிச்சை, தயிர், முருங்கை இலைகள், வேப்பிலைகள், கறிவேப்பிலை இவை அனைத்தும் பொடுகை அகற்றி கூந்தலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
எனவே முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது. நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை கருமையான கூந்தலுக்கு உதவுகிறது. கூந்தலின் செம்பட்டை தன்மையை மாற்றி கருமையை அளித்து செழிப்பான கூந்தலாக காட்சியளிக்க உதவுகிறது.
இவ்வாறு இதில் சேர்க்கும் அனைத்து பொருட்களும் ஒவ்வொரு மருத்துவ குணம் நிறைந்தவை. ஆக இவை முழுவதும் கூந்தலின் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது.
இது போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment