பொதுவாக அசைவ பிரியர்களுக்கு கடல் உணவு வகைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அதன் ருசியும் சத்துக்களும் ஏராளம்.
கடல் உணவுகளில் இறால் அதிக புரதச்சத்து மிகுந்தது. இறாலில் பல வகைகள் உண்டு. அதில் வீட்டில் வளர்க்கப்படும் இறால்களை விட கடலில் கிடைக்கும் இறால்களில் சுவை அதிகம். அதிலும் சிறிய வகை இறால்களில் சத்தும் ருசியும் அதிகம். ஆனால் சிறிய வகை இறால்களை சுத்தம் செய்தல் கொஞ்சம் கடினமான வேலையாகும். ஆயினும் அதில் உள்ள சத்துக்காகவும் ருசிக்காகவும் இதை செய்யலாம்.
கடல் உணவுகளை சமைப்பதில் மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது அதை சுத்தப்படுத்துதல். ஏனெனில் அவை துர்நாற்றத்தை அதிக அளவில் கொண்டிருக்கும். அந்த துர்நாற்றம் ஒழுங்காக சுத்தம் செய்யாவிடில் மொத்த உணவையும் கெடுத்து விடும். எனவே எப்போதும் கடல் உணவு வகைகளில் சமைக்கும் முன்பு நம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் சுத்தப்படுத்துதல்.
இரண்டாவது சமைக்கும் முறை. கடல் உணவுகளை சரியான முறையில் சமைக்காவிட்டால் உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். செரிமான பிரச்சனை ஏற்படக் கூடும். மேலும் ருசியும் கெட்டுவிடும். குறிப்பிட்ட நேரத்தில் சமைத்தல் கடல் உணவுகளை பொறுத்தவரையில் மிகுந்த சுவையை அளிக்கும்.
இறால் தொக்கு மிகவும் சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம். இந்த இறால் தொக்கு ஆறு மாதத்திற்கு வரை வீட்டிலே பதப்படுத்தி சுவை மாறாமல் உண்ணலாம்.
தேவையான பொருட்கள்:
இறால் - ஒரு கிலோ
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மல்லி - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
தக்காளி - 4
பூண்டு - 100 gram
இஞ்சி - சிறிதளவு
மிளகாய் தூள் - 100 கிராம்
காஷ்மீர் மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை பழம் - ஒன்று
செய்முறை :
ஒரு கிலோ இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்கு கழுவ வேண்டும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு திரும்பவும் கழுவி அதை நன்கு உலர்த்த வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் உணர்த்துவதற்கு துணியிலோ அல்லது பேப்பரிலோ போட்டு அதன் ஈரம் உறிஞ்சும் வரை சிறிது நேரம் வைத்து உலர வைக்க வேண்டும். ஈரப்பதம் நீங்கிய பின் உபயோகப்படுத்தினால் மட்டுமே நீண்ட நாட்களுக்கும் வரும். ருசியும் நன்றாக இருக்கும். முதலில் இஞ்சியை தோல் நீக்கி கழுவி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பூண்டை ஒன்றும் பாதியுமாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை இஞ்சி உடன் சேர்த்து அரைத்தாலும் நன்றாகவே இருக்கும். ஆனால் ஒன்றும் பாதியுமாக தட்டி வைத்துக் கொண்டால் அது வாயில் படும்போது சுவை நன்றாக இருக்கும். சிறிய வகை பூண்டுகளை தேர்ந்தெடுத்தால் நல்ல வாசனையுடன் இருக்கும்.
மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் மற்றும் மல்லி இவை ஐந்தையும் எண்ணெய் சேர்க்காமல் நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் சூடு ஆறியவுடன் அரைத்து பொடியாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல பழுத்த தக்காளியை தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பு சூடானதும் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் இறாலை உப்பு சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நாட்டுக்கோழியை தவிர மற்ற எந்தவித அசைவ உணவுகள் சமைக்கும் பொழுது கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்ற வாசனை மிக்க எண்ணெய் வகைகளை பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் இதில் வரும் வாசனை அசைவ உணவுகளின் நறுமணத்தை தடுத்துவிடும்.
எனவே இந்த வாசனை வேண்டியவர்கள் மட்டும் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையெனில் வாசனை இல்லாத ஒரு சமையல் எண்ணெயை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இப்பொழுது இறால் முழுவதுமாக வேகக்கூடாது. ஓரளவுக்கு நிறம் மாறியவுடன் இறக்கி விட வேண்டும். அதாவது பாதி அளவு மட்டுமே வெந்து இருக்க வேண்டும். முழுவதுமாக வெந்து இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது ரப்பர் போன்று ஆகிவிடும்.
இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் வரவேண்டும் என்பதற்காக ஈரப்பதம் நீங்குவதற்காக பொரித்துக் கொள்கிறோம். உடனுக்குடனே பயன்படுத்துவது என்றால் பொரித்துக் கொள்ள தேவையில்லை.
பின்பு அதே எண்ணெயில் அரைத்த இஞ்சியையும் தட்டிய பூண்டையும் வதக்க வேண்டும். அதன் பச்சை வாடை போகும் அளவிற்கு வதங்கியவுடன் அதன் பின் அரைத்த தக்காளியை அதில் இட்டு பின்பு வதக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் அளவிற்கு தக்காளி வதக்க வேண்டும்.
வதங்கிய பின்பு மல்லி, சீரகம், கடுகு, மிளகு மற்றும் வெந்தயம் பொடியை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து எண்ணெயில் நன்கு கிளற வேண்டும். காஷ்மீர் மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது தொக்கு நன்கு நிறமாக வரும். எனவே மிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாய் ஆகியவற்றை அளவு பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல நிறம் வேண்டியவர்கள் காஷ்மீர் மிளகாய் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். கல் உப்பு சேர்த்துக் கொண்டால் சுவை நன்றாக இருக்கும். இப்பொழுது ஒரு பழ எலுமிச்சை சாறு கொட்டை இல்லாமல் அதில் சேர்க்க வேண்டும். (எலுமிச்சைச் சாறுக்குப் பதிலாக எலுமிச்சை பழ அளவு புளியை கெட்டியாக கரைத்து ஊற்றினாலும் நன்றாக இருக்கும். எலுமிச்சைச்சாறு அல்லது புளி இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.)
எண்ணெய்யும் மசாலாவும் தனியே பிரிந்து வருமாறு வதக்கிய பின்பு இப்பொழுது இறாலை சேர்த்து கிளறி ஏழு நிமிடங்கள் வேக வேண்டும். இறாலை பொரிக்கும் பொழுது அதில் உப்பு சேர்த்து இருப்பதால் இப்பொழுது உப்பு பார்த்துவிட்டு பின்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இறால் மசாலில் நன்கு ஊறி எண்ணெய் தனியாக பிரிந்து மசாலாவுடன் இறால் சேர்ந்து சுருண்டு வரும்.
இரண்டு நிமிடங்களுக்கு அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். இப்பொழுது குமிழ் குமிழாக மசாலா வெடிப்பது போன்று தோன்றும். அது தக்காளி அரைத்து ஊற்றி இருப்பதால் அப்படி இருக்கும். மிதமான சூட்டில் இரண்டு மூன்று நிமிடங்கள் அதாவது எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வைத்த பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான இறால் தொக்கு ரெடி.
இது மிகவும் சுவையாக இருக்கும். தேவைப்படும்போதும் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் மொத்தமாகவும் செய்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்துவதாக இருந்தால் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக புளியை சேர்த்துக் கொள்ளலாம். இறால் வாயு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் நாம் அதிக அளவு சேர்க்கும் பூண்டும் இஞ்சியும் அதைத் தடுக்கிறது.
பூண்டு இன்னும் அதிகப்படுத்தினால் சுவை இன்னும் நன்றாகவே இருக்கும். இது அசைவ பிரியர்களுக்கு நல்ல விருந்து. இந்த இறால் தொக்கு சோறு, சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்
நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த விரும்புவர்கள் அதை அடிக்கடி வெயிலில் வைத்து எடுத்தால் சுவையுடனும் கெடாமலும் அப்படியே இருக்கும். இதை அப்படியே கண்ணாடி பாட்டிலில் காற்று போகாதவாறு மூடி வைக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியிலும் வைத்து பதப்படுத்தலாம். கண்ணாடி பாட்டிலில் இதை வைக்கும் பொழுது அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பாத்திரங்கள் அலுமினிய பாத்திரங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
இது போன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment