எல் நினோ விளைவு என்றால் என்ன?
இது மற்ற வானிலை மாற்றங்கள் போன்று சிறிய கால இடைவெளியில் தோன்றி குறைந்த காலம் இருக்கும்
நிகழ்வு கிடையாது. மாறாக 7 முதல் 12 வருடங்கள் இடைவெளியில் தோன்றி ஒரு வருட காலங்கள் பூமியில் பல்வேறு இடங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு பெரிய வானிலை மாற்றமாகும். வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஒருவித பாதிப்பையும் தென்கிழக்கு பகுதிகளில் மற்றும் ஒரு பாதிப்பையும் பூமத்திய ரேகை பகுதிகளில் வறட்சி போன்ற மிகப்பெரிய பாதிப்புகள் என பலவிதமான தாக்கங்களை பலவிதமான பிரதேசங்களில் ஏற்படுத்த வல்லது.
இது உலகம் முழுவதும் உள்ள வானிலையை மாற்றி அமைத்து கடும் வறட்சி மற்றும் புயலை உண்டு பண்ணி அதிக சேதாரத்தை விளைவிக்கும்.. நம்மில் பலர் எல் நினோ என்றால் அது அதிக மழைப்பொழிவை புயலையும் கொடுத்து சேதாரத்தை விளைவிக்கும் என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால் அது மழைப்பொழிவை மட்டும் அல்லாமல் அதிகளவு வறட்சியையும் உருவாக்கும். அதாவது மொத்த வானிலையும் மாற்றி அமைத்து விடும். குறிப்பாக சொல்லப்போனால் பருவ கால நிலை மாறுபாடே இதன் முக்கிய விளைவாகும்.
கடல் பரப்பு வெப்பமடைதல் என்ற முதல் காரணமே எல் நினோ விளைவின் முக்கிய காரணம். அதாவது மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் கடலின் மேற்பரப்பு அதிக வெப்பமடைதல் இதற்கு காரணம் ஆகும்.
இந்த எல் நினோ விளைவு அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் நிகழ்வு. அதன்படி 2023 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு எல் நினோ ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது. எல் நினோ விளைவு ஏற்படுத்தும் தாக்கங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உள்ளடக்கம்:
மாறுபட்ட மழைப்பொழிவு
உயரும் வெப்பநிலை
மீன் மற்றும் நுண்ணுயிரிகள் சிதைப்பு
புயல் மற்றும் சூறாவளியின் மாறுபாடுகள்
2023ல் எல்நினோ விளைவு
இந்தியாவை தாக்குமா...?
மாறுபட்ட மழைப்பொழிவு:
எல் நினோ விளைவு உலகெங்கிலும் மழைப்பொழிவில் ஒரு மாறுபட்ட நிலையை உருவாக்குகிறது. ஒரு இடத்தில் அதிகமான மழையையும் மற்றொரு இடத்தில் மழைப்பொழிவு இல்லாமல் வறட்சியும் கொடுத்து பாதிப்பை உருவாக்கும். எடுத்துக்காட்டாக தென் அமெரிக்கா மற்றும் அதனை ஒட்டி உள்ள நாடுகளில் அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தை உண்டு பண்ணி மிகப்பெரிய சேதாரத்தை உருவாக்கும்... அதைப்போல் இங்கே தெற்கே ஆஸ்திரேலியா இந்தோனேஷியா மற்றும் இன்னும் பல நாடுகளில் மழைப்பொழிவு பருவத்தில் வறட்சியை உருவாக்கி பஞ்ச நாடுகளாக மாற்றியமைத்து விடும்.
உயரும் வெப்பநிலை:
இந்த விளைவின் இன்னும் ஒரு முக்கிய பாதிப்பு அதிகபட்ச வெப்ப நிலை ஆகும். இது உலகின் அனைத்து இடங்களிலும் அல்லது பெரும்பாலான இடங்களில் சராசரி வெப்பநிலையை விட அதிக வெப்பநிலையை கொண்டு வருகிறது. பசுபிக் கடலின் உயர்ந்த வெப்பநிலை தெற்கே நகர்வதால் வட அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இயல்புக்கு மாறான வறட்சி மற்றும் அதிகமான வெப்பநிலையை தோற்றுவிக்கிறது. இதனால் விவசாயம், சுற்றுச்சூழல், பிற உயிர்களின் வாழ்வாதாரம், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும்
மனிதர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இயல்பு நிலையை விட
இது ஒன்று முதல் இரண்டு டிகிரி வரை வெப்பநிலையை உயர்த்தலாம். இந்த அதிக வெப்பநிலை உயர்வு காட்டுத் தீ மற்றும் காடுகள் அழிதல் போன்றவற்றிற்கும் காரணமாகிறது. இதனால் உலகின் பசுமை வெகுவாக குறையும்.
மீன் மற்றும் நுண்ணுயிரிகள் சிதைப்பு:
எல் நினோ விளைவு நில வளத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் நீர் வளத்தையும் அதிகமாக பாதிக்கிறது.
இது கடல் வாழ் உயிரினங்களின் சமநிலையை அதிக அளவில் பாதிக்கும். கடலில் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் மீன்களின் வளர்ச்சி தடைபடுகிறது. மீன்கள் முதல் நுண்ணுயிர்கள் வரை அனைத்து உயிரினங்களின் வளர்ச்சியும் பாதிக்கும். இதனால் அதன் வளங்கள் தடைபடுவதோடு மிகவும் குறைந்து விடுகிறது. மீன்கள் மற்றும் பிற உயிரினங்கள் வேறு பகுதிக்கு சென்று விடுகிறது. இதனால் கடற் சார்ந்த தொழில் பாதிப்பிற்குள்ளாகிறது. நுண்ணுயிர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் வளர்ச்சி பாதிப்பு உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும்.
புயல் மற்றும் சூறாவளியின் மாறுபாடுகள்:
கடற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதால் கடலில் ஏற்படும் சூறாவளிகளிலும் மாற்றத்தை உருவாக்கும். அதாவது ஒரு பகுதியில் அதிகமான சூறாவளி மற்றும் புயலையும் மறுபக்கத்தில் சாதாரண நிலையும் சந்திக்கும். அதாவது அட்லாண்டிக் போன்ற கடல் பகுதிகளில் மிகக் குறைந்த மழைப்பொழிவு, சூறாவளி மற்றும் புயல் போன்றவைகளும் பசுபிக் கடலில் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் அதிக சூறாவளி புயலை உண்டு பண்ணலாம். இதனால் கடலை ஒட்டி உள்ள நிலப்பகுதிகளும் அதிக பாதிப்பிற்கு உல்லாவதால் மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடையும்.
2023ல் எல்நினோ விளைவு:
ஆண்டின் கடைசி பகுதியில் இந்த எல்நினோ விளைவின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்கு மேல் இதன் பாதிப்பானது தொடங்க ஆரம்பிக்கும். அதிக மழை, புயல் மற்றும் அதிக பஞ்சங்கள் இந்த விளைவின் காரணமாகவே உலகில் உருவாகிறது.
உலகில் பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் இந்த விளைவை சமாளிக்க தயாராகி விட்டன. இதற்காக பெரும் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளன. இது உலகின் பல பகுதிகளில் வெப்பநிலையை அதிகரிக்க வைத்துள்ளது.
நமது இந்தியா ஒரு விவசாய நாடு. பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக பாதிக்கப்படும் என்று கணித்துள்ளனர். நமது இந்தியா தென்மேற்கு பருவக்காற்றினால் வரும் மழைப்பொழிவையே நம்பியுள்ளது.
இந்தியாவை தாக்குமா.?
இந்தியாவைப் பொறுத்தவரை எல் நினோ பாதிப்பு இருக்கலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதன் பாதிப்பு 70% வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக முதல் கட்டமாக தென்மேற்கு பருவக்காற்று ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கொடுக்க வேண்டிய மழையை இதுவரை குறைவாகவே கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இயல்பாக பெய்யும் மழையின் அளவில் 30 சென்டிமீட்டருக்கும் குறைவாகவே இதுவரை பொழிந்துள்ளது. பருவநிலை மாறுபாடுகளுக்கு இந்த எல் நினோ விளைவும் முக்கிய காரணமாக உள்ளது. ஆனாலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட விளைவை விட இந்த வருட எல்நினோ விளைவு குறைந்தபட்ச பாதிப்பை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இந்த முறை தோன்றிய எல்நினோ விளைவு பலவீனமான நன்றாக உணரப்படுகிறது. ஆனால் இது இந்தியாவை எவ்வாறு தாக்கும் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முழுமையாக கணிக்க இயலாது. இருப்பினும் சேதாரங்கள் மிகக் குறைந்த அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக 2015ஆம் ஆண்டில் எல் நினோ விளைவால் இந்தியா பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் பல இடங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டு பஞ்சங்கள் ஏற்பட்ட நிலையில் அதே சமயத்தில் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
தண்ணீரில் தத்தளித்தது. அதைப் போன்று இந்த வருடமும் தென்மேற்கு பருவ மழை சிறிதளவு பொய்த்தாலும் வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு...
தற்போதைய ஆய்வின்படி இந்த வருட எல் நினோ விளைவு இந்தியாவின் பல பகுதிகளை வித்தியாசமான முறையில் பாதிக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன...
7 முதல் 12 வருடங்களுக்கு இடையில் தோன்றும் எல் நினோ விளைவு வரும் காலங்களில் குறைந்த கால இடைவெளியில் தோன்ற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு உலக வெப்பமயமாதலே காரணம்..
.
காலநிலை மாறுபாடுகள், பருவக்காற்று பொய்த்து போவது, கடுமையான வறட்சி, பஞ்சம், அதிதீவிர மழை மற்றும் புயல் இவை அனைத்தும் இயற்கையே.
இயற்கையை எதிர்ப்பதற்கோ மாற்றுவதற்கோ நம்மால் இயலாது. இயற்கையுடன் சரணடைவதை தவிர நம்மால் எதுவும் செய்ய இயலாது. நம்மால் முடிந்தவரை இயற்கையைப் பாதுகாப்போம். இயற்கை சீற்றங்களில் இருந்து நம் தலைமுறையை விடுவிப்போம்.
இது போன்ற தகவல்களை மேலும் அறிய எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்






No comments:
Post a Comment